தாமாக முன்வந்து வெளியிடும் ஆவணங்கள்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP)
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP)
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது, தொழில் நிறுவனங்களை ஊக்குவித்தல், தொழில் நிதியுதவி மற்றும் வேலைவாய்ப்புகளை பெறுதல் மூலம், நிலையான வளர்ச்சி மற்றும் செல்வ வளத்தைப் பெருக்கி, ஊரக (கிராம) சமூகங்களை மேம்படுத்தும் திட்டமாகும். உலக வங்கியும், தமிழ்நாடு அரசும், 70 : 30 என்ற பங்கில் நிதியளித்துள்ளன.
திட்ட வளர்ச்சி நோக்கம்
தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில், “ஊரக நிறுவனங்களை மேம்படுத்தி, நிதியுதவியை அணுகும் வாய்ப்பை ஏற்படுத்தி, வேலை / தொழில் வாய்ப்புகளை உருவாக்குதலே”, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் (VKP-TNRTP), திட்ட வளர்ச்சி நோக்கம் ஆகும்.
திட்டம் செயல்படும் பகுதி
2017 முதல் 2023 வரையான ஆறாண்டுக் காலத்திற்கு, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களில் (சென்னை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கன்னியாகுமரி, திருப்பத்தூர் தவிர), 120 வட்டாரங்களில் உள்ள 3994 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நிதிப் பங்களிப்பு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு, உலக வங்கியும், தமிழ்நாடு அரசும், 70 : 30 என்ற பங்களிப்பில், ரூ. 919.73 கோடி (142.8 மில்லியன் டாலர்) மதிப்பீட்டில் நிதியளித்துள்ளன. உலக வங்கியின் கடனுதவி ரூ. 643.81 கோடி (100 மில்லியன் டாலர்) மற்றும் தமிழ்நாடு அரசின் (GoTN) நிதியுதவி ரூ. 275.92 கோடி (42.8 மில்லியன் டாலர்) ஆகும்.
திட்டத்தின் கட்டமைப்பு
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம்: VKP – TNRTP), தமிழ்நாடு சங்கங்களின் பதிவுச் செட்டம் 1975 –ன் படி வடிவமைக்கப்பட்டு, பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ், அமைக்கப்பட்டுள்ள, TNRTS –ன் வழிநடத்துதலில், இத் திட்டம் மேலாண்மை செய்யப்பட்டு, செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டங்களைப் பொறுத்தவரை, மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில், மாவட்ட ஊரக புத்தாக்கத் திட்டங்கள் (மாவட்ட சங்கம்) உருவாக்கப்பட்டு, இத்திட்டம் திறம்பட செயல்படுவதற்கு வழிகாட்டப்படுகிறது.
TNRTS –ன் நிர்வாகக் குழுவும் (GB) செயற்குழுவும் (EC) திட்ட நோக்கம் சார்ந்த முடிவுகளை எடுக்கவும், மாநில திட்ட மேலாண்மை அலகுப் பணியாளர்களுடன் இணைந்து வழிநடத்தவும் செய்கின்றன. இந்த திட்டம் மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான திட்ட மேலாண் அலகுகளால் செயல்படுத்தப்படுகிறது.
- இந்திய ஆட்சித் துறைப் பணி (IAS) அலுவலரான, மாநிலத் திட்ட மேலாண்மை அலகின் – முதன்மைச் செயல் அலுவலர் (CEO), தலைமையில் செயல்படும் பிரதிநிதிகள், அலுவலர்கள் திட்டம் செயல்படுத்தப்படுவதை நேரடியாக மேற்பார்வையிட்டுக் கண்காணிக்கிறார்கள்.
- தற்போது 24 மாவட்ட திட்ட மேலாண்மை அலகுகள் (DPMUs), தற்போது திட்டத்தைச் செயல்படுத்தும் அலகுகளாக உள்ளன. மாவட்ட செயல் அலுவலர் (DEO), தலைமையேற்று, நான்கு நிர்வாக அலுவலர்கள் துணையுடன், திட்டத்தின் மேம்பாட்டைக் கண்காணித்து வருகிறார்.
- 31 மாவட்டங்களிலுள்ள 120 வட்டாரங்களில், வட்டார மேலாண்மை அலகு நிறுவப்பட்டுள்ளது; இங்கு திட்டத்தின் மூன்று அணியினர் துணையுடன், வட்டார அணித் தலைவர் தலைமையில் திட்டம் கண்காணிக்கப்படுகிறது.
திட்டத்தின் பயனாளர்கள்
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், சுயஉதவிக்குழு (SHG) மகளிர் / குடும்பத்தினர், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியல் இனத்தினர், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை – ஆகியோரை உள்ளடக்கிய இலக்கு மக்களிடம் கவனம் செலுத்துகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட வட்டாரங்களில் (திட்டப் பகுதிகளில் உள்ள உற்பத்தியாளர் குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்பு மற்றும் தொழில்முனைவோர்) உள்ள வேளாண்மை சார்ந்த மற்றும் வேளாண்மை சாராத, துறைகளில் உள்ள உற்பத்தியாளர் குடும்பத்தினர், இதன் பயனாளர்களாக இருப்பார்கள்.
திட்டப் பகுதிகளில், நுண், குறு மற்றும் சிறு தொழில்முனைவோரை, தனித்தனியாகவோ அல்லது குழுக்களாக உருவாக்கவும், ஊரக நிறுவனங்களை வளர்த்து மேம்படுத்த, உற்பத்தியாளர் குழுக்கள் (PGs), தொழிற்குழுக்கள் (EGs) மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (PCs) – ஆகியவற்றை உருவாக்குவதை திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சமுதாயத் திறன் பள்ளிகள் (CSS) மற்றும் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CFS) வழியாக, திறன்களை வளர்க்கவும், திட்டம் துணைசெய்கிறது.
திட்டத்தின் முதன்மைப் பகுதிகள்
இந்த திட்டமானது, பின்வரும் நான்கு முதன்மைப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது:
- ஊரக நிறுவனச் சூழல் மேம்பாடு
- நிறுவன தொழிற்திட்ட நிதியுதவி
- திறன் வளர்ப்பு மற்றும் வேலை / தொழில் வாய்ப்புகள்
- திட்ட மேலாண்மை, திட்டப்பயன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு
திட்டத்தின் நுண் பகுதிகள் (cross cuttings) :
- சூழல் மற்றும் சமூக மேலாண்மைக் கட்டமைப்பு (ESMF),
- பாலின சமத்துவம்
- தகவல் அறிவிப்பு, தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்
- கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை திட்டத்தின் நுண்பகுதிகளாகும் (cross cuttings)
ஊரக நிறுவனச் சூழல் மேம்பாடு:
புதிய மற்றும் வளரும் நிறுவனங்களை மேம்படுத்தி வலுப்படுத்துவதற்கும், வேலை / தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கும் ஏற்ற தொழிற்சூழலை உருவாக்குவதே இப்பகுதியின் முதன்மை நோக்கமாகும். இந்த நோக்கத்திற்குள், மாவட்ட பகுப்பாய்வு (DDS), மதிப்புத் தொடர் ஆய்வு (VCA), பங்கேற்பாளர்களுடன் கூடிய வளர்ச்சித் திட்டம் (PGP), மதி சிறகுகள் தொழில் மையம் (OSF) போன்ற துணைப் பகுதிகளும் உள்ளடங்கும்.
ஊரக (கிராம) பகுதிகளில் செயல்படும் தனிநபர் மற்றும் குழுவினர் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பங்கேற்பு முறையில், தகுதியுள்ள நிறுவனங்களை அடையாளம் காணுதல், தற்போதுள்ள ஊரக நிறுவனங்களை வலுப்படுத்துதல், விற்பனைச் சந்தை மற்றும் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டு வாய்ப்புகளை அடையாளம் காணுதல், தொழில் மேம்பாட்டு ஆதரவுச் சேவைகளை வழங்குதல், மற்றும், நிலைத்தியங்கும் வகையில், தொழிலை மேம்படுத்துவதற்கான தகவல் வழிகாட்டி – ஆகியவை இப்பகுதியின் (இக்கூறின்) முதன்மைச் செயல்பாடு. இது மகளிர் பொறுப்பேற்று நடத்தும் நிறுவனங்கள் மற்றும் பசுமை நிறுவனங்களை வளர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
(i) மாவட்ட பகுப்பாய்வு (DDS):
மாவட்ட பகுப்பாய்வின் (DDS) நோக்கம், உள்ளூர் சூழலில் செயல்படும் முதன்மைத் தொழில்கள் / துணைத் தொழில்கள் மற்றும் உற்பத்திப் பொருட்களைக் கண்டறிந்து, முன்னுரிமை கொடுப்பதாகும். கூட்டாண்மை நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் இரண்டாம் நிலை தகவல்களின் பகுப்பாய்வு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, முதல்நிலை பகுப்பாய்வு செய்யப்பட்டு, அது, மாவட்ட பகுப்பாய்வு (DDS) எனப்படுகிறது. இதில், மதிப்புத் தொடர் அணுகுமுறை மூலம், அடுத்த கட்ட பகுப்பாய்வுக்கான குறிப்பிட்ட துறைகள், துணைத் துறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் தொடர்பான வாய்ப்புகள் மற்றும் சவால்களை அடையாளம் காணும் வகையிலான மாவட்ட அளவிலான ஆழமான மதிப்பீடும் உள்ளடங்கும். இந்த மாவட்ட பகுப்பாய்வு அறிக்கையானது (DDS reports), அந்தந்த மாவட்டத்திலுள்ள, மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்டக் குழுவால் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும்.
(ii) மதிப்புத் தொடர் ஆய்வு (VCA):
மதிப்புத் தொடர் ஆய்வானது, முன்னுரிமை அளிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்கள் / துணைப் பொருட்களை (மாவட்ட பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டவை), ஆழமாக ஆய்ந்தறிந்து, மகளிர், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளர்கள் – ஆகிய இலக்கு மக்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, நிறுவன மேம்பாட்டிற்கான செயல்நுட்பங்களை (strategies) உருவாக்கும் வாய்ப்புகள், சவால்கள் மற்றும் இடர்களைப் பற்றிய சிறந்த புரிதலைக் கொண்டுள்ளது. விற்பனைச் சந்தை வாய்ப்புகள், கட்டுப்பாடுகள் பற்றிய நுண் பகுப்பாய்வைப் பெறுவதற்கும், அதன் மூலம், நிறுவன மேம்பாட்டிற்கான பொருத்தமான வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீடுகளைப் பெறுவதற்கும் இந்த ஆய்வு துணை செய்கிறது.
(iii) மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் (PGP):
மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டம் என்பது, இலக்கு மக்கள் உறுப்பினர்கள், உற்பத்தியாளர்கள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுடன், இலக்கு நோக்கிய குழுக் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம், ஊர்கள் (கிராமம்), வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில், ஊரக சமுதாயத்தினரை மேம்படுத்தும், உள்ளடங்கிய ஒரு தொழில் வளர்ச்சித் திட்டம் ஆகும். இந்த மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டமானது, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுடன் இணைந்து, இலக்கு மக்களை எளிதில் சென்றடைகிறது.
இதற்காக, இரு சமுதாய வல்லுநர்கள், ஒரு சுய உதவிக் குழு உறுப்பினர், ஒரு கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர், ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் ஒரு ஊரக தொழில்முனைவோர் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, அனைத்து 3994 ஊராட்சிகளிலும் கள ஆய்வு மேற்கொள்ளும். இத்தகைய கள ஆய்வுத் தகவல்கள், தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட அலைபேசி பயன்பாட்டின் வழியாக உள்ளிடப்படும். மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் கள ஆய்வின் முடிவுகள் ஊரக முதலீட்டுத் திட்டங்களை உருவாக்க வழிவகுக்கும் (VIP). இப்படி ஊரக முதலீட்டுத் திட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, வட்டார முதலீட்டுத் திட்டமாக (BIP) ஒருங்கிணைக்கப்படும்; இத்தகைய வட்டார முதலீட்டுத் திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட முதலீட்டுத் திட்டமாக (DIP) ஒருங்கிணைக்கப்பட்டு உருவாக்கப்படும்.
நிறுவன மேம்பாட்டு ஆதரவுச் சேவைகள்:
(i) ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு (PLF) மூலம் சேவைகள் வழங்குதல்:
சமூகத்தினரை அணிதிரட்டுதல் மற்றும் சேவை வழங்கும் திறனை வளர்த்துக் கொண்ட, சுய உதவிக் குழு உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு, வேலை / தொழில் வாய்ப்பு, தொழில் முனைதல் முதலிய பல்வேறு துறைகளில், “சமுதாய வல்லுநர்களாக (CP), பயிற்சியளிக்கப்பட்டு, பயன்படுத்தப்படுவார்கள். சமுதாய வல்லுநர்களின் முதன்மை நோக்கம், இலக்கு மக்களை அணிதிரட்டுதல், ஊக்கப்படுத்துதல், திறன் வளர்த்தல்; மேலும் தனிநபர் மற்றும் குழுவினர் தொழில் நிறுவனங்களை நிறுவுதல் ஆகும்.
நிறுவன சமுதாய வல்லுநர்களை, (ECP), ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அடையாளம் கண்டு, திறன் பயிற்சியளித்து, கண்காணித்து, பொறுப்புகளை வழங்கும்.
(ii) மதி சிறகுகள் தொழில் மையம்:
மதி சிறகுகள் தொழில் மையம் என்பது, திறன் வளர்ப்பு முதல் தொழில்முனைவு வரை, அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்கப்பெறும் இடம். இது, தொழில்தொடங்குவதற்கு, தொழில் திட்டம் தயாரித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல், ஆதரவு சேவைகள், ஊரக தொழில்முனைவோருக்கு நிதியுதவி, தொழில்நுட்பம் பயிற்றுவித்தல், திறன் வளர்ப்பு, தொழில் வரையறைகள், சட்டதிட்ட இணக்கங்கள், விற்பனைச் சந்தைத் தகவல், இணைப்பு வாய்ப்புகள் – என அனைத்தையும் ஓரிடத்திலேயே செய்கிறது. மூன்று வட்டாரங்களுக்கு ஒரு ‘மதி சிறகுகள் தொழில் மையம்’ அமைக்கப்படுகிறது.
நிறுவன ஊக்குவிப்பு, மதிப்பு சங்கிலி வலுப்படுத்துதல் மற்றும் கூட்டாண்மைகள்:
(I) தனிநபர் நிறுவனங்கள்:
ஒரு தனிநபருக்கோ, ஒன்றுக்கு மேற்பட்ட தனிநபர்களுக்குக் கூட்டாகவோ சொந்தமான நிறுவனமே, தனிநபர் நிறுவனம் ஆகும். தனிநபர் நிறுவனங்கள் நுண் நிறுவனம், குறு நிறுவனம் மற்றும் சிறு நிறுவனம் என வகைப்படுத்தப்படுகின்றன. ஐந்து லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனம் நுண் நிறுவனம்; 05 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் நிறுவனம் நுண் நிறுவனம்; 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் நிறுவனம் சிறு நிறுவனம் ஆகும்.
6000 நுண் நிறுவனங்கள், 500 குறு நிறுவனங்கள் மற்றும் 120 சிறு நிறுவனங்களைக் கண்டறிந்து, தொழில்நுட்ப வழிகாட்டல், பயிற்சி கொடுத்தல், நிதியுதவிச் சேவைகள் மற்றும் தொழில்முனைவோரால் வேண்டப்படும் பிற வகை சேவைகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
(II) குழுவினர் நிறுவனங்கள்:
இந்த திட்டத்தின் மூலம், உற்பத்தியாளர் குழுக்கள், தொழிற்குழுக்கள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.
a) உற்பத்தியாளர் குழுக்கள் (PGs):
உற்பத்தியாளர் குழு என்பது, ஒரு கிராமத்தில் (ஊரில்) உள்ள குறிப்பிட்ட பொருளின் உற்பத்தி / துணைப் பொருளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களின் குழுவாகும்; இக்குழுவினர், கூட்டாக ஒருங்கிணைந்து, தம் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, ஒருங்கிணைந்து சந்தைப்படுத்தி, உறுப்பினர்களின் வருமானத்தைப் பெருக்குவதற்கு செயல்படுகின்றனர். இக்குழுக்களின் உறுப்பினர் வரம்பு 30 முதல் 150 வரை இருக்கும். நடப்பு 2023 – 24 நிதியாண்டிற்குள் 2000 உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட இலக்கு அமைக்கப்பட்டுள்ளது.
b) தொழிற்குழுக்கள் (EGs):
தொழில்முனைவில் கூட்டு உரிமை மற்றும் கட்டுப்படுத்தலுடன், வருமானத்தையும் இழப்பையும் பகிர்ந்து கொண்டு, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்களின் குழுவாகும். இக்குழு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பாக, 10 முதல் 30 வரையிலான உறுப்பினர் அளவைக் கொண்டிருக்கும் (குறு சிறு நடு நிறுவன (MSME) பதிவு / கூட்டாண்மை நிறுவனம் / வரையறுக்கப்பட்ட சட்ட நிறுவனம்). இந்த தொழிற்குழுவின் நோக்கம், உற்பத்திச் செலவைக் குறைத்து, தரத்தை அதிகரித்து, கூட்டாண்மை மூலம், வருவாய் மற்றும் உற்பத்தி வரம்பை அதிகரிப்பதாகும். நடப்பு 2023 – 24 ஆம் ஆண்டிற்குள் 500 தொழிற்குழுக்கள் அமைக்கப்பட இலக்கு அமைக்கப்பட்டுள்ளது.
c) உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs):
உற்பத்தியாளர் கூட்டமைப்பு (PC) என்பது, ஒருங்கிணைதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் செல்வ வளம் அடிப்படையில், சேவை வழங்குதலுக்கான, உற்பத்தியாளர்களின் பொதுவான உயர்மட்ட கூட்டமைப்பு. பொதுவாக இதன் உறுப்பினர்களாக 300 முதல் 3000 உற்பத்தியாளர்கள் வரை இருப்பார்கள். ஊரக அளவில் தொடங்கப்படும் உற்பத்தியாளர் குழுக்கள், வட்டார / மாவட்ட அளவுகளிலும் ஒருங்கிணைக்கப்பட்டு, விரிவுபடுத்தப்படலாம். சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக செயல்படும் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், உற்பத்திகளை ஒன்றுதிரட்டுதல், தரமான உள்ளீட்டை வழங்கல், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பதப்படுத்தல் (processing), அதிக தொழிலாணைகளுக்காக (ஆர்டர்) உற்பத்தி மதிப்பைக் கூட்டுதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடும். நடப்பு 2023 – 24 நிதியாண்டிற்குள் 25 உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் அமைக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1. நிறுவன தொழிற்திட்ட நிதியுதவி:
இணை மானிய நிதித் திட்டம் (எம்ஜிபி) மற்றும் இதர நிதியுவித் சேவைகள் மூலம், தனிநபர் மற்றும் குழுவினர் நிறுவனங்களின், தொழில் திட்டங்களுக்கான, தகுதியான நிதி நிறுவனங்களின் நிதியுதவியை அணுக வைப்பது வாழ்ந்து காட்டுவோம் (VKP – TNRTP) திட்டத்தின் முதன்மைக் கொள்கையாகும்.
இணை மானிய நிதித் திட்டம்:
இணை மானிய நிதி திட்டம் (எம்ஜிபி), கடன் பெற்றவர்களை திருப்பிச் செலுத்துவதை உற்சாகப்படுத்துவதோடு, தனிநபர் மற்றும் குழுவினர் நிறுவனங்களுக்குக் கடன்வழங்க, நிதிநிறுவனங்களை ஊக்குவிக்கிறது. கூட்டாண்மை நிதி நிறுவனங்கள் (PFI) மூலம், அனுமதிக்கப்பட்ட கடன்களுடன், கடன் வாங்குபவர்களுக்கு இணை மானிய நிதியும் கிடைக்கிறது. வாங்கிய கடன் தொகையில் 70% மட்டும் முறையாக திருப்பிச் செலுத்தினால், கடன் வாங்கியவர் 30 % தள்ளுபடிக்கு தகுதியுடையவர் ஆகிறார். தொழில்முனைவோர்கள் / குழுவினர், தங்கள் நிறுவனத்தை செழிப்பாக நடத்தி, கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் கவனம் செலுத்த, இத்திட்டம் துணைசெய்கிறது.
முதல்முறை தொழில்முனைவோர், மகளிர் பொறுப்பேற்று நடத்தும் தொழில்கள், தொழிற்குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், மாற்றுத் திறனாளிகள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் நிதித் துறையால் சவாலாகக் கருதப்படும் பிற வகை நிறுவனங்களுக்கும் இணை மானிய நிதித் திட்டம் பொருந்தும். மேலும்,
புதுமையான முன்னோடித் திட்டங்கள் – வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP – TNRTP) பின்வரும் புதுமையான திட்டங்களுக்கு இணை மானிய நிதியை வழங்கும்:
• ஊரக கைவினைஞர்களுக்கு உறுதுணை செய்ய, நெசவு நெய்தல், மட்பாண்டங்கள் வனைதல் மற்றும் ஆக்கப்பூர்வமான பிற புத்தாக்கத் தொழில்கள்.
• இயற்கை வேளாண் உணவு நிலையம் (hub) வசதி: குறிப்பாக உணவுத் துறையை மேம்படுத்தும், இயற்கை மற்றும் மரபுசார்ந்த உணவுகள்.
• சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை ஆற்றல்: சூரிய ஆற்றல் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் மக்கும் பொருட்களைத் தயாரிக்கும் பசுமை நிறுவனங்கள்.
நுண் தொழில் நிறுவன நிதித் திட்டம்: (NEFF):
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது, கோவிட்-19 நிதியுதவித் திட்டத்தைச் (CAP) செயல்படுத்தி, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் மற்றும் PLF-கள் மூலம், 88,349 நிறுவனங்களுக்கு ரூ. 259.78 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. CAP திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிதியானது நுண் தொழில் நிறுவன நிதித் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. சுயஉதவிக் குழு உறுப்பினர் / குடும்பத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நலிவுற்றோரால் நடத்தப்படும் புதிய மற்றும் ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களை ஆதரிப்பதற்கான தொழில்சூழலை இத்திட்டம் உருவாக்குகிறது.
முன்னறிவிக்கப்பட்ட நுண் தொழில் நிறுவன நிதித் திட்டமானது (NEFF), தற்போதைய சமுதாயம் சார்ந்த அமைப்புகளான (CBOs), PLFகள் மற்றும் VPRC –கள் போன்றவற்றின் வழிமுறைகளான தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்தல், மதிப்பீடு செய்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் நிதியை விடுவித்தல் போன்ற கொள்கைகளைப் பின்பற்றும்.
திறன்கள் மற்றும் வேலைகள்:
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP – TNRTP), நிலையான ஊதியம் மற்றும் சுய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உயர் மதிப்புள்ள வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கு பொருத்தமான திறன்களை மேம்படுத்துவது, மற்றும் விற்பனைச் சந்தையை எதிர்கொள்ளும் திறன் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு மூலம் தொழில்முனைவோரைச் திறம்பட செயல்பட வைத்தல் – ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்புப் பயன்களை அதிகரிப்பதற்கு, பயிற்சிக்கு முந்தைய மற்றும் பயிற்சிக்குப் பிந்தைய சேவைகள்:
இலக்கு இளைஞர்களை அடையாளம் காண்பது, திறன்வளர்ப்புப் பயிற்சிக்காக பயனாளர்களை ஒன்றுதிரட்டுதல், ஆலோசனை வழங்குதல், பயிற்சிக்கு முந்தைய மற்றும் பயிற்சிக்குப் பிந்தைய சேவைகள் – போன்ற செயல்பாடுகள் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும்.
புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையம்:
திறமையான ஊரக இளைஞர்கள் தங்களுடைய தொழில் வாய்ப்புகளைத் தேடிப் பெறவும், கூடுதல் வருமானத்தை ஈட்டவும் மற்றும் சிறந்த தொழில் வளர்ச்சிக்காகவும், அடிக்கடி தங்கள் சொந்த ஊரிலிருந்து வெளியூர்களுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது. அவ்வாறு இடம்பெயரும் போது, வாழ்க்கையை நடத்துவதற்கான செலவு, மற்றும் நகரத்தின் சமூக – பொருளாதார தேவைகளைச் சமாளிப்பது கடினம். இதனால் கிடைக்கும் வேலையை கைவிடுதல், அடிப்படை ஆசைகளை நிறைவேற்ற இயலாமை மற்றும் தொழிற்சந்தைகளுடன் (வேலைவாய்ப்பு கிடைக்கும் இடங்கள்) ஒன்றிணைய முடியாமை – முதலிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
இவர்களுக்காக தொடங்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையம் (MSC), இடம்பெயர்ந்து வந்தோருக்குத் தேவைப்படும் பல்வேறு சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, இலக்கு இடங்களான 120 வட்டாரங்களில் இருந்து செயல்படுகிறது. புதுமையான திட்டம். புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையம் (MSC), இடம்பெயர்ந்தோருக்கு வேண்டிய சிறந்த சேவைகளை அணுக உதவுகிறது; மேலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு முன்னேற்றத்தைப் பற்றி கண்காணிக்கிறது. உடல்நலம், கல்வி மற்றும் பணம் பரிவர்த்தனைச் சேவைகள் பற்றிய முதன்மைத் தகவல்களை வழங்குகிறது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP – TNRTP), திறன் பயிற்சி வழங்கும் அமைப்பினர், சமுதாயம் சார்ந்த அமைப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் முதலிய கூட்டமைப்பினருடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையங்களை அமைத்து நடத்தி வருகிறது. இந்த கூட்டமைப்பு, புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையங்களை (MSCs) அமைப்பது மட்டுமல்லாமல், நீண்ட காலம் நிலைத்து இயங்க வைக்கவும் உறுதி செய்யும்.
முதன்முதலாக வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்வாய்ப்புகள் அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் புலம்பெயர்ந்தோர் ஆதரவு மையங்களை அமைத்திட, வாழ்ந்து காட்டுவோம் திட்டம் திட்டமிட்டுள்ளது.
சமுதாயம் சார்ந்த பயிற்சி மற்றும் திறன் வளர்ப்பு:
(a) சமுதாயத் திறன் பள்ளிகள் (CSS):
ஊரகப்பகுதி (கிராமப்புறம்) சமூகங்களில், நெசவு நெய்தல், உலோகப் பணிகள், ஓவியம் தீட்டுதல், மட்பாண்டங்கள் வனைதல், கூடை மற்றும் பாய் முடைதல் முதலிய பழம்பெரும், அதிக வருமானம் கிடைக்கும் கலைத் திறன்களுக்கு அதிக தேவை உள்ளது.
உள்ளூரிலுள்ள, திறன்பயிற்சி கொடுக்கும் திறன்பெற்ற, மற்றும் தங்கள் திறன்களை சமூகத்திற்கு கற்றுக்கொடுக்க ஆர்வமுள்ள வல்லுநர்கள், திறன் பயிற்சி வல்லுநர்களாக அடையாளம் காணப்படுவார்கள். இவர்களைப் பயன்படுத்தி, ஆர்வமுள்ள உள்ளூர் மக்களுக்குப் பயிற்சியளிக்கவும், பழம்பெரும் கலைகளைப் புதுப்பிக்கவும், தொழில் மேம்பாட்டை உறுதிப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், தேவையான குறைந்தபட்ச உள்கட்டமைப்புகளை உருவாக்கி, சமுதாயத் திறன் பள்ளிகள் ஏற்படுத்தப்படும்.
இதுபோன்ற பழம்பெரும் கலைக்கான திறன் பயிற்றுநர்கள் மட்டுமின்றி, இரண்டு / நான்கு சக்கர ஊர்திகள் பழுதுபார்ப்பு, வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் பழுதுபார்ப்பு, கொத்தனார் வேலை, குழாய் பதிப்பு வேலை, பற்றாசு (வெல்டிங்) மின் இணைப்புப் பணி, அலைபேசி பழுதுபார்ப்பு, தகவல்நுட்பம் சார்ந்த (கணினிச்) சேவைகள் உள்ளிட்ட சில அதிக தேவை ஏற்படும் தொழில்துறைகளிலும், வல்லுநர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைக் கொண்டு பயிற்சிகள், பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஊரகத் தொழில்களை உருவாக்கவும், சமுதாயத் திறன் பள்ளிகள் வழியாக, சமுதாய உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இத்திட்டத்தின் கீழ், நடப்பு 2023 – 24 நிதியாண்டில், 18,000 ஊரக இளைஞர்களுக்கு சமுதாயத் திறன் பள்ளிகளில் (CSSs) பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
(b) சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CSSs):
சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CFS) திட்டத்தை அமைப்பதன் மூலம், வேளாண்மை மற்றும் அது தொடர்பான துணைத் தொழில்களில், தொழில்நுட்பத்தைப் பயிற்றுவிக்கும் வகையில் முன்னோடி விவசாயிகளை (SPARKs: Skillfull, Personal ability, Attitude, Resourceful and Knowledgeable) கண்டறிந்து உருவாக்கி அவர்கள் மூலம், ஊரக அளவில் சமுதாய உறுப்பினர்களிடையே திறன் வளர்ப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
SPARK என்பவர், ஒரு குறிப்பிட்ட வேளாண் செயல்பாடுகளில், அறிவு, திறன்கள், மனவளம் மற்றும் நல்ல தொழிலறிவு – ஆகியவற்றைக் கொண்ட ஒரு சமூக பயிற்சி வல்லுநர். இவர்கள் தங்கள் தொழில்திறனை பகிர்ந்து கொள்வதில் ஆர்வமும் விருப்பமும் கொண்டிப்பதால், ஊரகப் பகுதி மற்றும் வட்டார அளவில், அடிப்படையான தொழில்நுட்பத் திறன்கள் பற்றி, சமூக உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றனர்.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம் இத்தகைய முன்னோடி வல்லுநர்களை அடையாளம் கண்டு, சமூகப் பண்ணைப் பள்ளிகள் மூலம் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் பிற தனிப்பட்ட பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டுகிறது, கற்பிக்கிறது, பயிற்சி வழங்குகிறது, வழிநடத்துகிறது மற்றும் வழிகாட்டும் ஸ்பார்க்குகளாக அவர்களை ஈடுபடுத்துகிறது.
சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CFS’s), விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் உள்ள குறிப்பிட்ட திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து, அதற்கான தீர்வுகளுக்குத் தேவையான தொழில்நுட்ப அனுபவ அறிவை வழங்க, உரிய வல்லுநர்களைக் கொண்டு, தொழில்நுட்பப் பயிற்சியினை சமுதாய உறுப்பினர்களுக்கு வழங்கும். இந்த சமுதாயப் பண்ணைப் பள்ளிகள், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படும் தனிநபர் மற்றும் குழு தொழில்முனைவோர்களுடன் சிறந்த கூட்டுப் பயன்களைப் பெறும் வகையில், இணைந்து செயல்படும். இத்திட்டத்தின் கீழ், நடப்பு 2023-24 நிதியாண்டில், உற்பத்தியாளர் குழுக்களில் உள்ள 60,000 உறுப்பினர்களுக்கு, வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்பு தொடர்பான பயிற்சிகள் சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன.
a) திட்ட மேலாண்மை, விளைவுகள் (பயன்கள்) கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வு:
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை (VKP – TNRTP) திறனுடன் செயல்படுத்த, வலுவான மேலாண்மையும் கண்காணிப்பு அமைப்புகளும் இருக்க வேண்டும்; மேலும் நிதி மேலாண்மை, கொள்முதல் மேலாண்மை, மனிதவள மேலாண்மை, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பழங்குடியினரின் சமூகப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) – முதலிய செயல்முறைகளும் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்படுகின்றன.
கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வு:
‘கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வு’ என்பது, , திட்டச் செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த விவரங்களைத் தயார் செய்து; திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது திட்ட நோக்கத்தில் இருந்து விலகிக் செல்லும் போதோ, அவற்றைக் கண்டறிந்து, குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யத் திட்ட மேலாளர்களுக்கு உதவி செய்யவும், தொடர்ந்து செயல்படும் ஒரு செயல்முறையாகும். ‘கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆய்வு’, திட்ட செயலாக்கத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து உண்மையான, எளிதில் புரிந்து கொள்ளத்தக்க தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள உதவும்.
மின்னணு தகவல் மேடை உருவாக்குதல்:
தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் என்பது, திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து உடனடிக் கண்காணிப்பு மேற்கொள்ளவும், திட்டம் செவ்வனே செயல்படவும், ஒரு மின்னணு தகவல் மேடையை உருவாக்குவது திட்டத்தின் தவிர்க்க இயலாத ஒரு பகுதியாக அமைந்துள்ளது. வாழ்ந்து காட்டுவோம் (தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத்) திட்டம், இதற்கான ஒரு மென்பொருள் செயலியை உருவாக்கவதிலும், வடிவமைப்பதிலும், செயல்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தச் செயலி, திட்டத்தின் தகவல் மேலாண்மை முறையினை நிலைப்படுத்தவும், வலுப்படுத்தவும், மேலும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (VKP – TNRTP) குறித்த அனைத்துத் தகவல்களுக்கான களஞ்சியமாக இருக்கவும் உதவும்.